மேனியை மெருகூட்ட
அழகான பெண்கள் கூட படிப்பு, வேலை என வெளியில் சுற்றும்போது கருத்து விடுகிறார்கள். நேரமின்மையால் தங்களின் தோற்றம் குறித்து அதிக அக்கறை எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடுவர். ஆனால் ஆரோக்கியமான சருமம் வேண்டுமெனில் சிறிது நேரமேனும் அதற்காக மெனக்கெடுவதில் தவறில்லை.
வுட் லேம்ப் ஃபேஷியல்:
இதைச் செய்து கொள்ளுவதற்கு முன் அழகுக் கலை நிபுணரிடம் சருமத்தைக் காட்டி தங்களுடையது வறண்ட சருமமா அல்லது எண்ணெய்ப் பசை சருமமா என்பதைக் கண்டறிய வேண்டும். வுட் லேம்ப் அதைக் கண்டுபிடித்து விடும். எண்ணெய் சருமமாக இருந்தால் மஞ்சள் புள்ளிகள் தெரியும். வறண்ட சருமம் எனில் வெள்ளைப் புள்ளிகள் தெரியும். அதற்கேற்ப சிகிச்சை பெறலாம்.
முகத்தின் திடீர் பளபளப்புக்கு "ஆக்ஸிஜன் ப்ளீச்":
இந்த ப்ளீச்சில் ஆக்ஸிஜன் கலந்து இருப்பதால் சருமத்தில் அரிப்பு, அலர்ஜி போன்ற பிரச்சினைகள் வராது. முகத்தில் உள்ள பூனை முடிகள் கூட சரும நிறத்துக்கு மாறிவிடுவது இதன் கூடுதல் சிறப்பு.
கோல்டு பேஷியல்:
மணப்பெண்களால் விரும்பி செய்யப்படும் ப்ளீச் இது. 24 காரட் கோல்டு க்ரீம் என்பதால் மிக விரைவில் முகம் பொலிவடையும். ஜெல் மாஸ்க் போடுவதால் முகம் வழவழப்பாக மாறும்.
கழுத்து மசாஜ்:
இயல்பிலேயே அழகான முகம் என்றாலும் மன அழுத்தத்தால் முகம் சுருங்கிக் கொள்ளும். சிலருக்கு கழுத்தில் துர்நீர் சேர்ந்து கொண்டாலும் மன அழுத்தம் அதிகரித்து தலைவலி உண்டாகும்.
பின் கழுத்தில் உள்ள அழுத்தப் புள்ளிகளை மசாஜ் செய்வதால் டென்சன் குறைந்து ரிலாக்ஸ் ஆகலாம்.
வீட்டிலேயே செய்து கொள்ளும் சிகிச்சைகள்:
1 டீஸ்பூன் ஜெலட்டினை 1/2 கப் வெந்நீரில் கரைத்து அதில் கை, கால் நகங்களை ஊற வைத்தால் நகங்கள் உடையாது, ஆரோக்கியமாகவும் இருக்கும்.
1 டேபிள்ஸ்பூன் கேரட் சாறில் 2 டீஸ்பூன் பாதாம் பருப்பு, 2 டேபிள்ஸ்பூன் பாசிப்பயறு ஆகியவற்றை ஊற வைத்து அரைத்த விழுதை முகம், கை, கால் என வெயில்படும் இடங்களில் தடவி வந்தால் வெயிலால் கருத்த சருமம் நிறம் மாறும்.
ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் தலா 2 டீஸ்பூன், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் தலா 1/2 டீஸ்பூன் கலந்து லேசாகச் சூடுபடுத்தி மசாஜ் செய்து வந்தால் கூந்தல் உதிராமல் செழிப்பாக வளரும்.